வீட்டில் இருக்கும் சாப்பாட்டை உண்பதை விட கடைகளில் திண்பண்டங்களை வாங்கி உண்பதிலேயே குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள்.
சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. கையில் காசு இருப்பதால் நினைத்த போதெல்லாம் கடைக்குச் சென்று ஏதேனும் வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கு ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு விடுகிறது. கடைக்குச் சென்று தான் விரும்புவதை வாங்கி உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவுகளை நாளடைவில் வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே தன் விருப்பம் போல் பலவற்றையும் வாங்கி சாப்பிட்டு பழகிவிட்ட குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் போது திண்பண்டங்களின் மீது வெறுப்பு ஏற்பட்டு அலுப்புத் தட்டி விடுகிறது. எப்போதும் போல் பெற்றோரிடம் இருந்து பணம் பெறும் அவர்கள் கையில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் மனக்கிளர்ச்சியை உண்டாக்கும் மதுப் பழக்கம் மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாவதெல்லாம் நடக்கிறது. அதிலும் காசு வைத்திருக்கும் நான்கைந்து நண்பர்கள் கிடைத்து விட்டால் நிலைமை விரைவிலேயே மோசமாகிவிடும். குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்கிய பெற்றோர் இச்சமயத்தில் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது.
கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம்.
அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது.