36 வயதான தமிழ் பெண் ஒருவரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மாதங்களாக இந்தப் பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி உச்ச நீதமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 28ம் திகதி கல்லடி பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பு காவலில் வைப்பதற்காக பெற்றுக் கொண்ட உத்தரவு எதனையும் இதுவரையில் அதிகாரிகள் அந்தப் பெண்ணின் சட்டத்தரணிகளுக்கு காண்பிக்கவில்லை என்பதுடன் அந்தப் பெண்ணை சந்திப்பதற்குக் கூட சட்டத்தரணிகளுக்கு இடமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அறிந்து கொள்ள அந்தப் பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் உரிமையுண்டு எனவும், சட்டத்தரணி ஒருவரை சந்தித்து சேவை பெற்றுக்கொள்ள அந்தப் பெண்ணுக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் உரிமை உண்டு எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சருக் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணியாற்றும் காதலரை சந்திக்க அந்த நாட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமான போது இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறும், இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்வது சட்டவிரோதமானது எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவில் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.