நீண்டகால யுத்தம் காரணமாக அபிவிருத்தியில் பின்னடைந்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆளணியினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 09 மாகாணங்களிலும் பல்வேறு அரசியலமைப்பு நிலைமைகள் காணப்பட்ட போதிலும் மதிப்புமிக்க நாடு என்ற வகையில் முழு நாட்டையும் ஒரே மாதிரியாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய சக்தியாக சமுர்த்தி திட்டம் மாறியுள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதனை கடந்த காலத்தை விடவும் மேலும் பலப்படுத்தி முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,
பொதுமக்களின் நன்மைக்காக சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறப்பான செயற்திட்டங்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.