யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த ஆறு மாணவர்களில் ஒருவரான கோணேஸ்வரன் பிரவீன் என்ற மாணவனின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றுள்ளன.
இல – 59/3 அம்பலவாணர், அத்தியடி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இறுதிக்கிரியை நடைபெற்றுள்ளன.
பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த இவர், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்விகற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பிரவீனும் ஒருவர்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக மண்டைதீவு – சிறுதீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று படகு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட விபத்தில் படகில் பயணித்த 7 மாணவர்களுள் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியுள்ளார்.
இதில், நந்தன் ரஜீவன் (உரும்பிராய்) 18, நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17, தனுரதன் (கொக்குவில்) 20, பிரவீன் (நல்லூர்) 20, தினேஷ் (உரும்பிராய்) 17, தனுசன் (சண்டிலிப்பாய்) 18 ஆகியோரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.