யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் பலருக்கு காணிகள் மற்றும் வீடுகள் இல்லாத நிலையில், படையினருக்கு காணிகளும் வீடுகளும் இங்கு தேவையா என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். அவ்வாறாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், யாழ். மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு காணிகளும் வீடுகளும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், படையினர் தமக்கு காணிகளை ஒருபுறம் சுவீகரிக்க மறுபுறம் வீட்டுத் திட்டங்களையும் பெறுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் அரச உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்தகைய வீடமைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், படையினருக்கோ அல்லது விசேட அதிரடி படையினருக்கோ அங்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க முடியாது என்றும் அதனை தாங்கள் எதிர்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடமைப்பு அதிகார சபையானது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தால் வீடமைப்பு அதிகார சபையை தொடர்ந்து இயங்க விட முடியாது என்றும் கூறியுள்ளார்.
படையினருக்கு வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதுடன் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.