சமூக ஊடக நிறுவனமான Facebook குறைந்தது 60 கைபேசி, தொழில்நுட்பச் சாதன நிறுவனங்களோடு தகவல்-பகிர்வு பங்காளித்துவ உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது.
கடந்த பத்தாண்டில் ஆப்பிள் (Apple), அமேஸான் (Amazon), பிளாக்பெர்ரி(BlackBerry), மைக்ரோசாஃப்ட் (Microsoft) , சாம்சுங் (Samsung) உள்ளிட்ட நிறுவனங்களுடன் அத்தகைய உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டன.
Facebook பயனீட்டாளர்களின் தகவல்களைப் பயன்படுத்த அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக பயனீட்டாளர்களின் சம்மதம் நேரடியாகப் பெறப்படவில்லை.
பயனீட்டாளர்களின் தகவல்கள் வேறொருவரோடு பகிரப்படாது என்ற கூறப்பட்டபோதும், சில நிறுவனங்கள் பயனீட்டாளர்களின்வழி தகவல்பகிர்வைத் தடைசெய்திருப்போரின் தகவல்களைக் கூட பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மார்ச் மாதம், Facebook அதன் பல்லாயிரக்கணக்கான பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளிவந்தன.
பல குறைகூறல்கள் எழுந்ததைத் தொடர்ந்து Facebook பயனீட்டாளர்களின்வழி பிறரின் தகவல்கள் சேகரிக்கப்படுவதைத் தடைசெய்வதாகக் கூறியது. இருப்பினும், தொலைபேசிகள், கையடக்கக் கருவிகள் போன்ற சிலவற்றுக்கு அந்தத் தடை பொருந்தாது என்ற தகவலை வெளியிடவில்லை.
ஒரு கருவியில் சேகரிக்கப்படும் தகவல்களை அதில் உள்ள செயலிகளால் திரட்ட முடியும். அது தனிநபர் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நேர்காணல்களில், Facebook அதிகாரிகள் தகவல்-பகிர்வு முறையைத் தற்காத்து பேசினர்.
தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எந்தவோர் சம்பவமும் இதுவரை பதிவானதாகத் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.