பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய யூனியன் எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க உள்ளது.
இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு. ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.
இதனால் ஐரோப்பிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்துள்ளனர். எல்லை தாண்டிய பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பசு தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.