சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான ரிஎன்எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, சிறிலங்கா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள ரிஎன்எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.
எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அண்மைய பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ஊடக சுதந்திரம் பற்றிக் கேள்வி எழுப்பிய கூட்டு எதிரணிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ரிஎன்எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையம் மூடப்பட்டதன் பின்னால் பாரிய, பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்வைத்த கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் ரிஎன்எல் தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பி வந்தமையே, அதன் பொல்கஹவெல பரிமாற்ற மையம் மூடப்படுவதற்குக் காரணம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் நிதி அமைச்சராக மங்கள சமரவீர, இந்த விவகாரம் பற்றி தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டதுடன், ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மங்கள சமரவீர, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் கூட்டு அரசாங்கத்துக்குள் தீவிரமடைந்துள்ள மோதல்களை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.