குடும்ப பிரச்சனை தொடர்பாக விசாரணைக்குச் சென்ற பொலிசார் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பொலிசார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனரட.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 6ம் பிரிவு ஹாஜியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 2 மணியளவில் நபர் ஒருவர் அவரது தாய் மற்றும் சகோதரியை தாக்குவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று அந்த நபரை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது, அவர் பொலிசார் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய 38 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.<