நாடாளுமன்றத்தின் புதிய பிரதிச் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான ஆனந்தகுமாரசிறி தெரிவு செய்யப் பட்டார்.
தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெ டுப்பில் ஆனந்த குமாரசிறிக்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் சுதர் ஷினி பெர்னாண்டோபுள்ளேக்கு ஆதரவாக 53 வாக் குகளும் அளிக்கப்பட்டன. ஒரு வாக்கு நிராக ரிக்கப்பட்டது.
கூட்டரசில் அங்கம் வகிக்கும் முதன்மை இரு கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே தற்போது பிரதி சபாநாயகர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்று, 27/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான அழைப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஆனந்த குமாரசிறியின் பெயரை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்மொழிந்தார்.
பொது எதிரணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியின் சார்பில் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயரை அந்தக் கட்சியின் பொருளாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பிரேரித்தார்.
சபைக்கு நடுவில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் இடம்பெறவேண்டும் என்று சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தாலும், இது இரகசிய வாக்கெடுப்பு என்பதால் அவசியமில்லையென சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
இரகசிய வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகியன புறக்கணித்திருந்தன. சபை ஆரம்பமாகும்வேளை இந்த இரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்தாலும், வாக்கெடுப்பு நேரத்தில் வெளியேறிருந்தனர்.
எனினும், பிரதி சபாநாயகர் பதவியானது சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக உள்ளது என்று கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
பிற்பகல் 3 மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பமாகி, பிற்பகல் 4.25 மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுபெற்றது. ஐ.தே.கவின் வேட்பாளருக்கு ஆதரவாக 97 வாக்குகளும், சு.கவின் வேட்பாளருக்கு ஆதரவாக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது.
கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. உறுப்பினர் பிரதி சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
பிரதமர், சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர், எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் புதிய பிரதி சபாநாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
புதிய பிரதி சபாநாயகருக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவைக்குள்ளேயே கைகொடுத்து வாழ்த்துமழை பொழிந்தனர்.
கூட்டரசு அமைக்கப்படும்வேளை சபாநாயகர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் என்றே இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் பதவியும் ஐ.தே.க. வசமாகியுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த திலங்க சுமதிபால, பிரதி சபாநாயகர் பதவியைத் துறந்து, கூட்டரசிலிருந்து வெளியேறினார்.
ஆளுங்கட்சிக்கு மற்றுமொரு நெருக்கடியை வழங்கும் நோக்கிலேயே பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை பொது எதிரணி பிரேரித்திருந்தது. ஆளுங்கட்சிக்குள் உள்ள ஒற்றுமையை பலத்தை பரிட்சித்துப் பார்ப்பதற்கான பொது எதிரணியின் வியூகமாகவே இது கருதப்பட்டது.
அதேவேளை, ஆளுங்கட்சியின் பிரேரணைகளுக்கு ஆதரவை வழங்கிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கையை விமர்சித்தது மட்டுமல்லாது, வாக்கெடுப்பிலும் பங்கேற்காதது குறித்து பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.