வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர்.
இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் என்ற போதிலும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் மூன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருந்துள்ளனர் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் குற்றம் சுமத்தியிருந்தார்
கடந்த சில மாதங்களுக்கு முன் வவுனியா சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இதில் கைதிகள் இடவசதியின்றி நெருக்கடிக்குள் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
கைதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போன்றும் புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த மோசமான இட நெருக்கடி காரணமாக ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், விலங்கள் போல நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.