சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சுக்கு நேற்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் இருவர், எதிர்வரும் 20ஆம் நாள் கொழும்பில் உள்ள தமது தலைமையகத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கோரும் அழைப்பாணையை கையளித்துள்ளனர்.
வவுனியா- ஈரப்பெரியகுளத்தில் உள்ள பாடசாலையில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனிடம், சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுமாறு கோரப்பட்டது. அவர் அதனை நிராகரித்து விட்டார்.
இது தொடர்பாகவே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண கல்வி அமைச்சர், தாம் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அதனால் தாம் அதனை ஏற்றுவதற்கு மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.