அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளுக்கிடையிலும் செய்துகொள்ளப்பட்ட பரஸ்பர உடன்பாட்டுக்கு இணங்கவே பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போதே ராஜித மேற்குறித்த விடயத்தைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
”பிரதி சபாநாயகர் பதவிக்கு வெற்றிடம் நிலவியதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் ராமநாதனும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறியும் முன்மொழியப்பட்டார்கள்.
எனினும், தேர்தல் காலத்தில் வடக்கில் இடம்பெற்ற பிரச்சினை காரணமாக அங்கஜன் ராமநாதனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிட, ஜனாதிபதியும் இந்த விடயம் தொடர்பில் ஐக்கியத் தேசியக் கட்சியை தீர்மானம் எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
பின்னர், தமது கட்சி சார்பில் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேவை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார். இதனையடுத்து இவ்விருவர் தொடர்பிலும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.