பொது மேடையில் பெண்ணிடம் முத்தம் கேட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை’ என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாகத் தென்கொரியா சென்றனர். தென்கொரியாவின் சியோல் நகரில் நேற்று தொழிலாளர்கள் மத்தியில் பிலிப்பைன்ஸ் அதிபர் உரையாடினார். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த இரண்டு பெண்களை மேடைக்கு அழைத்து புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். சற்று நேரம் அந்தப் பெண்களிடம் நகைச்சுவையாகப் பேசினார். அந்தப் பெண்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினர். அப்போது, அந்தப் பெண்களில் ஒருவரை அழைத்த பிலிப்பைன்ஸ் அதிபர், `புத்தகம் கொடுத்ததற்கு கைமாறாக எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். உடனே அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி கோஷமிட்டனர். அந்தப் பெண்ணும் சற்று தயக்கத்துடன் அதிபர் கொடுத்த முத்தத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. சர்வதேச அளவில் பெண்கள் அமைப்பினர் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது புதிதல்ல. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மாட்டிக்கொள்வது இவரது வழக்கமான ஒன்றுதான்.
`பிலிப்பைன்ஸ் அதிபர் பொது மேடையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது மோசமான செயல். 73 வயதாகும் இவருக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை’ என்று உள்ளூர் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். `நான் நகைச்சுவைக்காகத் தான் அப்படிச் செய்தேன். அது என் ஸ்டைல். ஒரு சின்ன முத்தத்தில் எந்தத் தவறும் இல்லை. சில பெண்கள் அமைப்பினர் இதைப் பெரிதுபடுத்தி என்மீது பழி சுமத்துகிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு மனுவில் அதிகளவிலான பெண்கள் கையெழுத்திட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் ஆட்சியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் எதிராகச் சீற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் கடுப்பான பிலிப்பைன்ஸ் அதிபர், `என்னைப் பற்றியும் அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துபவர்களை முடக்க நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தவும் தயங்க மாட்டேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.