யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் நேற்று முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் நேற்றுக் காலைகாலை முதல் வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில், முற்பகல் 10.30 மணியளவில் உடுவில் பகுதியிலிருந்து கால்நடை வைத்திய அலுவலகத்துக்குப் பூனையொன்று சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கூடையொன்றுக்குள் அடைத்துப் பாதுகாப்பான முறையில் பூனையைக் கொண்டு வந்த குடும்பப் பெண்மணி கால்நடை வைத்தியர் முன்னிலையில் பூனையை எடுத்து விட முற்பட்டுள்ளார்.இதன்போது சற்றும் எதிர்பாராத வகையில் குறித்த பூனை அங்கிருந்து சடுதியாக ஓட்டம் பிடித்தது.
பூனையைக் கொண்டு வந்த பெண்மணி பூனையைத் தேடி ஓட்டம் பிடிக்கவே அங்கு ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணியுடன் இணைந்து அங்கு நின்ற வேறு பலரும் பூனையை வைத்திய அலுவலக வளாகத்தில் தேடியுள்ளனர்.வைத்திய அலுவலகத்தில் கால்நடைக்குச் சிகிச்சை பெறும் நோக்குடன் வந்த இன்னொரு பெண்மணி குறித்த பூனை வைத்திய அலுவலகத்தின் மதில் பாய்ந்து வெளியே சென்றுள்ளதைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைத்திய அலுவலகச் சுற்றுச் சூழலில் குறித்த பூனையை வலைவீசித் தேடிய போதும் குறித்த பூனை இறுதிவரை அகப்படவேயில்லை.
குறித்த பூனையை யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றின் ஓய்வுநிலை ஆசிரியையொருவர் கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த செல்லத்துடன் வளர்த்து வருகிறார்.மேற்படி ஆசிரியை திருமணம் செய்து கொள்ளாத காரணத்தால் அவருக்குப் பிள்ளைகள் யாருமில்லை.
இதுவே அவர் இந்தப் பூனை மீது அதிக பாசம் வைப்பதற்குக் காரணமாகும்.மேற்படி ஆசிரியை தனது மாதாந்த ஓய்வூதியச் சம்பளத்தில் பெரும் பகுதியைக் குறித்த பூனை வளர்ப்புக்குச் செலவிடுகிறார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாகப் பூனைக்கு ஏற்பட்ட ஒருவித நோய்த் தாக்கம் காரணமாக கடந்த நான்கு நாட்களாகப் பூனை உணவுப் பொருட்கள் எதுவும் உண்ணவில்லை.