இலங்கையின் வடக்கே, முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது,மாலை வேளை முள்ளியவளையினைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர் குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள். இதன்போது குளத்தின் ஆழப்பகுதிக்குச் சென்ற இளைஞன் ஒருவர் மீள வெளியில் வராத நிலையில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஏனைய நண்பர்கள் ஈடுபட்டும் காணாத நிலையில் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் உடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை குளத்தின் கரையில் ஒதுக்கியுள்ளது.இதில் முள்ளியவளை 01ஆம் வட்டாரம் பொன்னகரினைச் சேர்ந்த 21 அகவையுடைய இந்திரன் தகீசன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.டெனிஸ்குமார் வருகை தந்து உடலத்தைப் பார்வையிட்டு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் தற்பொழுது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.