யாழ்ப்பாண செய்திகள்:யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து வவுனியாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படவிருந்த பசு மாடுகள் இளைஞர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
வவுனியா வீரபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருக்கும் சில அமைப்புக்களின் உதவியுடன் பசு மற்றும் நாம்பன் மாடுளை குறைந்த விலைகொடுத்து வாங்கி வவுனியா வீரபுரத்திற்கு கொண்டு செல்ல கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
வவுனியா வீரபுரத்தை சேர்ந்த குறித்த நபரால் 15ற்கும் மேற்பட்ட பசுமாடுகளும் 5ற்கும் மேற்பட்ட காளை மாடுகளும் வாங்கப்பட்டு, உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் இன்று காலை அனலைதீவு துறைமுகத்திலிருந்து படகின் மூலம் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டு அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாடுகளை பொதுமக்களிடம் வாங்கியவர் அனலைதீவைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதோடு வவுனியா வீரபுரத்தில் வசித்துவருவதுடன், தான் மாட்டுப் பண்ணை ஒன்று வைத்திருப்பதாகவும் அதற்காகவே மாடுகளை வாங்கிச்செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.
உரிமையாளர்களிடமிருந்து மாடுகளை அடையாளப்படுத்தி, அனலைதீவு விவசாய கால்நடைகள் சம்மேளனம் இதற்கான உறுத்திப்படுத்தலை மேற்கொள்கின்றது.
ஆனால் அனலைதீவில் உள்ள மாடுகள் நல்லின கறவை மாடுகள் இல்லை எனவும், இவை பண்ணையில் வைத்து இலாபம் பெறக்கூடிய மாடுகள் இல்லை எனவும் இந்த மாடுகள் இறைச்சிக்காகவே கொண்டு செல்லப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், மாடுகளை கொள்வனவு செய்த குறித்த நபர் முன்னாள் வடமாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் பெறப்பட்ட அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
இன்றைய தினம் அனுமதி தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் குறித்த நபரை அழைத்திருந்தபோதும் இன்று காலையே குறித்த மாடுகளை படகில் ஏற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனலைதீவு கிராமசேவகரிடம் இந்த விடயம் தொடர்பாக எந்த வித பத்திரங்களும் அனுமதியும் பெறாமல் நேற்றுக் காலை மாடுகள் ஏற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நபர் இந்த விடயம் தொடர்பாக யாழ் அரச அதிபர் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச செயலரிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிளை மேற்கொண்டுள்ளார்.
அனலைதீவிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைத்தலைவர் ஜெயகாந்தன் ஆகியோரிடமும் மக்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பசுக்கள் உள்ளிட்ட மாடுகளை இறைச்சிக்காக ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்துவதோடு அந்த மாடுகளை ஊரில் உள்ள மக்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.