இராங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வரின் விபத்து தொடர்பில், ஆராட்சிகட்டுவ காவற்துறையினர் இன்று காலை சிலாபம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
ரங்கே பண்டாரவின் புதல்வர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக விசாரணை மேற்கொண்டுவரும் உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவரை கைது செய்வதற்கான அனுமதியினை பெறும் பொருட்டே நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சரின் புதல்வன் செலுத்திய கெப் ரக வாகனம், சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய – கோட்டபிடிய சந்தியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது குறித்த வீட்டில் 2 குழந்தைகள் உட்பட 4பேர் இருந்துள்ளபோதிலும், அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
வாகன விபத்தின் போது இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வரான யசோத ரங்கே பண்டா மது அருந்தியிருந்ததாக மருத்துவ பரிசோதனைகளில் இருந்து தெரியவந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது