இலங்கையின் புராதன பொக்கிஷ நகரங்களில் ஒன்றான பொலன்னறுவை தற்போது பாரிய அழிவினை எதிர் நோக்கியுள்ளது என்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமைகின்றது.
அப்படி என்ன ஆபத்து என்று ஆராயும் முன்னராக ஆபத்தின் அடித்தளம் குறித்து அலசி வருவது முக்கிய தேவையாகும்.
இன்றைய தொழில் நுட்பமும் வியக்கும் அளவிற்கு கி.பி 1153 தொடக்கம் கி.பி 1186 வரையில் இலங்கையை ஆண்ட முதலாம் பராக்கிரம பாகுவினால் பராக்கிரம சமுத்திரம் என்ற ஓர் பிரம்மாண்ட படைப்பு உருவாக்கப்பட்டது.
அப்போதைய விவசாயத் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக 55 அடி உயர பிரம்மாண்ட மேடையினை அமைத்து பராக்கிரம சமுத்திரம் என்ற சமுத்திரத்தை உருவாக்கினான்.
இந்த சமுத்திரத்தில் சுமார் 109000 ஏக்கர் அடி நீர்க்கொள்ளளவு கொண்டது. 20 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான வயற்பரப்பிற்கு இதன் மூலமாக நீர் அனுப்பி வைக்கப்படுகின்றது. 11 வாவிகள் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இத்தகைய பிரமாண்ட படைப்பின் மூலமாகவே தற்போது பொலன்னறுவைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதாவது அக்காலப்படைப்புகள் பல புணரமைக்கப்படாமல் காணப்படுகின்றன அவ்வாறான ஓர் நிலையை அடைந்துள்ள பராக்கிரம சமுத்திரத்தின் ஓரங்கள் தற்போது அதிக நீர் அலைகளினால் அரிக்கப்பட்டு வருகின்றன.
பாரிய மரங்களின் வேர்களின் அடி தெரியும் அளவிற்கு தற்போது நீர் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமாயின் பராக்கிரம சமுத்திர அணைகள் உடைந்து மக்கள் குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு தீர்வுகளை முன்னெடுக்காவிடின் பலத்த சேதங்கள் மக்களுக்கு ஏற்படும் என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பராக்கிரம சமுத்திரக் கரையினில் அமைந்துள்ள நிஸ்ஸங்கமல்ல மண்டபத்தினை தொட்டுவிடும் அளவு தற்போது மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியுமாகவுள்ளது. அங்கு உள்ள பாரிய மரங்கள் நகரைக் காத்து நிற்கின்றன.
எனினும் அம்மரங்களும் தற்போது அதிகரிக்கும் காற்றின் வேகத்தினால் வீழ்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி வீழ்ந்து விடும் நிலை ஏற்படுமாயின் சமுத்திர நீர் நகரை ஆட்கொள்ளும்.
இந்த விடயத்தினை கூடிய விரைவில் சரி செய்து பொது மக்களையும், ஓர் பொக்கிஷ நகரையும் காக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆதவன் செய்திப் பிரிவு விடுக்கும் அவரச வேண்டுகோள்.