போருக்கு பின்னர் மனித நேய அமைதி படையாக இராணுவம் செயற்பட வேண்டிய விதத்துக்கு ஸ்ரீலங்கா இராணுவம் உலக அளவிலேயே முன்னுதாரணமாக விளங்குவதாகவும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான இணைப்பாளர் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை இன்றைய தினம் (08.06.2018) சந்தித்து, வட மாகாண முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது.,
தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்ற நில ஆக்கிரமிப்புகளுக்கும் இராணுவத்துக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் கூறியுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் முன் வைப்பதாகவும் குற்றம்சாட்டிள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் தமக்கு மதிப்பும், மரியாதையும் இருப்பதாகவும் கூறியுள்ள அவர், அவருடன் இணைந்து செயற்பட தாங்கள் தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வட மாகாண முதலமைச்சரைப் போன்ற கனவான்களும் உண்மைகளை தீர விசாரித்து அறியாமல் அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது கவலை தருவதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் நியாயமான விருப்பங்களுக்கு எதிராக இராணுவம் ஒருபோதும் செயற்பட மாட்டாது என்றும் உறுதியளித்துள்ள யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, போருக்கு பிந்திய அமைதி சூழலில் மனித நேய அமைதி படையாகவே இராணுவம் தமிழர் பிரதேசங்களில் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போருக்கு பின்னர் மனித நேய அமைதி படையாக இராணுவம் செயற்பட வேண்டிய விதத்துக்கு ஸ்ரீலங்கா இராணுவம் உலக அளவிலேயே முன்னுதாரணமாக விளங்குவதாகவும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் இராணுவம் மனித நேய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதற்கு பின்னால் வேறு விதமான எந்த உள்நோக்கங்களும் கிடையாது என்றும் தெரிவித்த யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தமிழ் அரசியல்வாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இதனை உறுதிபடக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.