எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி மக்களை நம்பவைத்த ஹிட்லரின் பரப்புரையாளரான கோபல்ஸின் யுக்தியையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றிவருகின்றார்” என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07.06.2018) நடைபெற்ற மதுவரி கட்டளை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஹிட்லரின் பிரசார அமைச்சராகச்செயற்பட்ட கோபல்ஸின் யுக்தியை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் மக்கள் மத்தியில் அது உண்மையாகிவிடும் என்று நம்பினார். குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கோபல்ஸின் யுக்தியைத்தான் பின்பற்றிவருகின்றார்.
எவரோ எழுதி வழங்கும் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கின்றார், உண்மை நிலைமை தொடர்பில் பேச விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தால் அதற்கும் பதில் எதுவும் இல்லை.
அதேவேளை, தமது தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரியானது 20 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று மஹிந்த கூறியுள்ளதுடன், வாழ்க்கைச்சுமை என்பது விண்ணளவு உயர்ந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்,
கடந்த காலங்களில் மக்களின் வரிப் பணத்தில் வாழ்ந்தவர்கள் தற்போது வாழ்க்கைச்சுமை பற்றி பேசுவது சந்தோஷமளிக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.