உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாது தொடர்ந்தும்இழுத்தடிப்புக்களை செய்துவந்தால், பாராளுமன்றத்திலுள்ள தலைகளை மாற்றி மைத்ரிரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய ஆட்சியை கவிழ்க்கப் போவதாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் கூட்டு எதிரணியினர் என்றுதம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த தலைமையிலான அணியினர் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க இந்த எச்சரிக்கையைமுன்வைத்திருக்கின்றார்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலானஆட்சியைக் கவிழ்க்க பேயுடனும் கூட்டணி அமைத்து முன்னோக்கி நகரத் தாங்கள் தயார்என்று மஹிந்த தலைமையிலான அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விரைவில் வெளியேற்றி அந்தக் கட்சியை அரசியல் வங்குரோத்தில் இருந்துகாப்பாற்றிக்கொள்ளுமாறும் புதிய செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்ரத்நாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரதிசபாநாயகருக்கான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஜே.வி.பியினரும் விலகியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயேஅந்தக் கட்சியினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் மஹிந்த அணியின் நாடாளுமன்றஉறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.