வடக்கு, கிழக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள விடுவிக்கப்படக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்குரிய காணிகள் உரிய பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள தனியார் காணிகளை இவ்வருடத்துக்குள் மீளக் கையளிப்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06.06.2018) பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெறுவதற்கான கேள்வி, பதில் நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் காணியை ஒன்பது வருடங்களாக இராணுவத்தின் 64-ஆவது பிரிவின் தலைமையகம் பயன்படுத்தி வருகின்றது.
இதனால் முத்தையன்கட்டுக்குரிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் திணைக்களத்தை அவ்விடத்தில் அமைக்கமுடியாதுள்ளது, அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் காரியாலயத்தை அமைக்கக் காணி வழங்கப்படவில்லை,
எனவே, வடக்கு, கிழக்குப்பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இவ்வாறான காணிகளை, நிறுவனங்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? அந்நடவடிக்கை எக்காலப்பகுதிக்குள் நிறைவுபெறும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 64-ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள காணியானது இராணுவத்தினரால் துப்பரவுசெய்யப்பட்டு அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது, பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அந்தப் பகுதியை தற்போது மீளக் கையளிக்க முடியாதென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
படைப்பிரிவின் தலைமையகம் அமைப்பதற்கு முன்னர் அவ்விடத்தில் நீர்ப்பாசன காரியாலயமொன்று இருந்திருந்தாலும், அது திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை, அரச காணியாகவே அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுக்காணியொன்றில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தை அமைப்பது குறித்து பரீசிலிப்பதே சிறப்பு அதற்கான நிதியும் ஒதுக்கப்படும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிப்பதற்கு ஏற்றவகையிலான பாதுகாப்புப் படையினருக்கு தேவையற்றதெனக் கருதப்படும் காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு சென்றிருந்தபோது இதுபற்றி படையினரிடம் பேசினேன், கொழும்பு வந்த பிறகு இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடினேன், விரைவில் முல்லைத்தீவுக்கு வருவதற்கும் எதிர்பார்க்கின்றேன்.
விடுவிப்பதற்கென அடையாளம் காணப்பட்ட தனியார் காணிகளை இவ்வருடம் முடிவதற்குள் மீளக் கையளிப்பதற்குத் திட்டம் வகுத்துள்ளோம், இதற்கு நிகரான வகையில் அரச காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது, எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இந்நடவடிக்கையை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.