சீனாவில் சாலையை கடக்க தடுமாறிய முதியவரை போக்குவரத்து காவலர் தனது முதுகில் ஏற்றிக்கொண்டு சாலையை கடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள ஆறு வழிச்சாலையில் வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வர தொடங்கின.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர். பரபரப்பான சாலையில் முதியவருக்கு உதவி முன்வந்த போலீசாரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் போக்குவரத்து துறை அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவு செய்துள்ளது.