கனடாவின் Brossard பகுதியில் பெண்களைக் கடத்தும் ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிவதாக பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி Chevalier St பகுதியில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கும்போது ஒரு மனிதன் பின் பக்கமாக வந்து அவளை பிடிக்க முயன்றதாகவும் அவள் அவனிடம் சண்டையிட்டதோடு சத்தமிட்டதாகவும், அதனால் அவன் ஓடி விட்டதாகவும் தெரிவித்தார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் பொலிசாரிடம் புகாரளித்தனர்.
மே மாதம் 31 ஆம் திகதி மாலை 7 மணியளவில் பேருந்திலிருந்து இறங்கி நடந்த ஒரு பெண்ணை ஒரு மனிதன் காரில் பின் தொடர்ந்ததாகவும் அவள் தப்பி ஓடும் போது அவனும் காரிலிருந்து இறங்கி அவளைப் பின் தொடர்ந்து ஓடியதாகவும் அருகில் பொதுமக்கள் தென்படவே அவன் காரில் ஏறித் தப்பி விட்டதாகவும் மற்றுமொரு பெண் பொலிசாரிடம் தெரிவித்தாள்.
சரியாக அரை மணி நேரத்திற்குப்பின் இன்னொரு பெண் தன்னை ஒரு மனிதன் வேனில் பின் தொடர்ந்ததாகவும், பாதசாரி ஒருவர் அங்கு வரவும் அவன் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
பொலிசாரிடம் புகாரளித்த மூவருமே இளம்பெண்கள், மூன்று பெண்களும் தங்களைப் பின்தொடர்ந்ததாக கூறிய மனிதனைக் குறித்து கொடுத்த தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு Longueuil பொலிசார் அதிர்ச்சியடைந்ததுடன், அவனைக்குறித்த விவரங்களை வெளியிட்டு அவனைக்குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.