சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலியாகினர் என பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.