தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரச தலைவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் உரியவகையில் நிறைவேற்றப்பட வில்லை, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டி னார்.
ஆகக்குறைந்தது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரையாவது எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைசெய்துவிட்டு 18ஆம் திகதி கிளிநொச்சி வந்தாலே அரச தலைவரின் பயணம் சிறப்பானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டவரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் ஒடுக்கப்பட்டதாலுமே உரிமைகள் கோரி தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் இன்னமும் அரசியல் காரணங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரச தலைவரால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, பண வசதியுடைய அரசியல் கைதிகள் சிலர், சட்டத்தரணிகள் மூலம் வழக்கை உடைத்து விடுதலையாகியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது, சித்திரைப் புதுவருடத்தில் உங்கள் அப்பா உங்களுடன் இருப்பார் என்று அரச தலைவர் மைத்திரி கூறினார்.
புதுவருடமும் முடிந்துவிட்டது. விடுவிப்பு இல்லை. அரச தலைவர் கூறிய புதுவருடம் எதுவென்று தெரியவில்லை?
தேசிய சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்துகொள்ள எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார். கிளிநொச்சியில் வாழும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிவிட்டு அரச தலைவர் வந்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.