நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 வரை தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூன் 11 இன் பின்னர் இந்நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.
நாடு முழுவதும் குறிப்பாக மேல், தென், மத்திய, வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.