வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு, ஏட்டிக்குபோட்டியான போராட்டமொன்றை அறிவித்துள்ளது யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம்.
கடலட்டை அனுமதிக்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் பிரமுகர்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு, கடலட்டை பிடிப்பவர்களை கைது செய்வதாக நீரியலவள திணைக்கள அதிகாரிகள் வாக்குறுதியளித்த பின்னர், இந்த போராட்டம் ஏட்டிக்கு போட்டியாக நடத்தப்படுகிறது.
கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம் என்பவையே இந்த ஏட்டிக்கு போட்டி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் வே. தவச்செல்வம் இந்த ஏட்டிக்குபோட்டி ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பு பிரதேச மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலட்டை பிடிப்பதற்கு எதிரான போராட்டம் ஒரு முனையில் நடந்து வரும் நிலையில், ஒற்றுமையை சிதைக்கும் நடவடிக்கை இதுவென விமர்சித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (06) மருதங்கேண பிரதேசசெயலகத்தின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடற்றொழில் சமாசங்கள், சம்மேளன பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ய நடந்த கூட்டத்தில் கடற்றொழிலாளர சம்மேள தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. முக்கியமான “பார்ட்டி“ ஒன்றிருந்ததால், அதில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது என சம்மேளன தலைவர வே.தவச்செல்வம் பின்னர் அதற்கு விளக்கமளித்திருந்தார்.
கடலட்டைக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கலப்பிருக்க முடியாது, அரசியல்வாதிகள் முன்னிலைப்படுத்த முடியாதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. எனினும், கடலட்டைக்கு எதிரான போராட்டத்தை தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள்தான் ஆரம்பித்து, முன்னகர்த்தியிருந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை மருதஙகேணி பிரதேசசெயலகத்தின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சக்தி ரிவி நிருபருக்கு அளித்த பேட்டியில்- அரசியல்வாதிகள் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை, மக்களை ஒன்றிணைத்து சம்மேளனம்தான் போராட்டத்தை நடத்தியது என கூறியிருந்தார்.இதற்கு பிரதேச இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு சலசலப்பு உருவாகியிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின் சமாசத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். அரசியல் குழப்பங்கள் இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்த வேண்டுமென முன்னர் எடுத்த முடிவிற்கு மாறாக, கஜேந்திரன்- தமிழரசுக்கட்சியை அங்கு திட்டித்தீர்த்தார்.
அந்த கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (08) கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிடும் முடிவு எட்டப்பட்டது. இதில் சம்மேளன தலைவர் வே.தவச்செல்வமும் கலந்துகொண்டிருந்தார்.
எனினும், அன்று மாலையே திடீரென தனது முடிவிலிருந்து விலகி, தாம் தனியான போராட்டத்தை நடத்தப்போவதாகவும், தமது சம்மேளன கூட்டத்தின் பின்னரே முடிவெட்டப்படும் என்றும், நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிடுவதை தவிர்த்து, தம்முடன் இணைந்து போராடுமாறும் ஏற்பாட்டாளர்களிற்கு அறிவித்தார்.
எனினும், திட்டமிட்ட போராட்டத்தை இடைநிறுத்த முடியாதென கூறிய பிரதேசமக்கள், நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டனர். இதில் சமாசமோ, சம்மேளனமோ கலந்துகொள்ளவில்லை.
இந்தநிலையில் திடீரென நாளை பொதுவாழ்விற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமான போராட்டமொன்றை சம்மேளனம் அறிவித்துள்ளது. நீரியல்வள திணைக்களத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தை, முதலில் நீரியல்வள திணைக்களத்துடன் தொடர்புடைய போராட்டமாகவே அணுக வேண்டும். அதையே பிரதேசமக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்கள். அந்த போராட்டத்தின் பின், கடந்த இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்க யாருமே கடலிற்கு இறங்கவில்லை.
இது நிரந்தர தீர்வாக இல்லாவிட்டால்கூட, ஒரு முனையில் பிரதேசமக்கள் போராட்டத்தை நடத்தி, ஓரளவு சாதகமான சூழலை உருவாக்கி வரும்போது, கடற்றொழிலாளர் சம்மேளனம் ஏட்டிக்கு போட்டியாக நாளை ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு யாழ் பல்கலைழக மாணவர் ஒன்றியம் ஆதரவளிப்பதாக- முதலாவது அமைப்பாக அறிவித்துள்ளது. இதற்கான “ஏற்பாட்டை“ தமிழ் தேசிய மக்கள் முன்னணியே செய்ததை தமிழ் பக்கம் அறிந்துள்ளது. மாணவர் ஒன்றியத்தின் முடிவு, மாணவர் பிரதிநிதிகளிற்கிடையிலேயே பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பிரதேசத்தை சேர்ந்த வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம், நாளைய போராட்டத்திற்கு ஆதரவளிக்காதென முடிவெடுத்துள்ளது.