தனக்கு நன்மை நடப்பதாக இருந்தால் பாம்பு தன்னிடம் வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எனக்கும் பாம்புக்கும் ஒரு நெருக்கமுள்ளது. எனக்கு நல்லது நடக்கவுள்ளதென்றால் பாம்பு என்னிடம் வருவதை அவதானித்துள்ளேன்.
எனது பரீட்சைகள் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு நடந்துள்ளது.
சட்டக்கல்லூரியில் பரீட்சைக்காக தோற்ற இருந்தபோது பாம்பை காணவில்லை. இதனால் கவலை அடைந்திருந்தேன். அப்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். நான் பரீட்சையில் தோற்றமுடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு எனக்கும் பாம்புக்கும் தொடர்பு அதிகம்
இலங்கைத்தீவிலே வவுனியாவில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு கோயிலாகும்.
வடமாகாணத்தில் உள்ள பல நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர் காலத்தில் இருந்தே இருந்து வருகின்றன.
நாகர்கள் தமிழர்கள் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கின்றார். ஆகவே நாகதம்பிரான் வழிபாடு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு என்று கூறமுடியும்.
இலங்கைத்தீவின் பூர்விக குடிகளாக இனங்காணப்பட்ட தமிழர்களின் புராதன வரலாறுகள் முறையாக பேணப்படாமையால் இன்று எமது புராதன வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன் வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன.
வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆவணங்கள் பேணி பாதுகாக்க முடியாதவிடத்து கடல் கடந்த நாடுகளில் பேணக்கூடிய ஆவண காப்பகத்தில் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
இந்துக்களின் புராதன ஆலயங்களும், பல புராணக்கதைகளை கொண்ட ஆலயங்களும் அழிக்கப்பட்டு அல்லது உரச்சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் இந்துக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரியாதவகையில் உருமறைப்பு செய்யப்ட்டுள்ளன.
இவ்வாறான கபட நோக்கம் கொண்ட நிகழ்வுகளில் இருந்து எமது ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.