வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் இன்று (10.062018) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12.06.2018), வடகொரிய தலைவர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான சந்திப்பினை முன்னிட்டே அவர் இந்த விஜயத்தினை முன்னெடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரிலுள்ள சென்தோச தீவில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பிற்கான ஆயத்த பணிகள் சிங்கப்பூரில் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
இந்த சந்திப்புக்களை முன்னிட்டு, சிங்கப்பூரில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவிலான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் குறித்த மாநாட்டிற்கு இரு தினங்களுக்கு முன்னர் இன்று சிங்கப்பூருக்கு விஜயத்தினை முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை, கனடாவில் இடம்பெற்ற ஜி-7 மாநாடுகளை முடித்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிங்கப்பூருக்கான தனது பயணத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரின் இராணுவ விமானதளங்களில் ஒன்றான பயா லெபரில் (paya lebar) இன்று இரவு மணியளவில் வந்திறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை (11.06.2018) திங்கட் கிழமை சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உடனான ஒரு சந்திப்பினை ட்ரம்ப் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க – வடகொரியத் தலைவர்களுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் உலகின் பல பாகங்களைச் சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் ஒன்று கூடியுள்ளனர்.
சிங்கப்பூரின் F1 pit ( எப் வன் பிட்) கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக நிலையத்திலேயே குறித்த ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
ட்ரம்ப் – கிம் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியினை சேகரிக்கவும், நேரடி ஒளிபரப்பினை செய்யவும் சுமார் 2500க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.