கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா மீது நேரடியாக குற்றம் சாட்ட, கூட்டறிக்கைக்கான தனது ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார்.
கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.
உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். மாநாடு முடிந்த பின்னர், டிரம்ப் நேரடியாக சிங்கப்பூர் புறப்பட்டார். 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-ஐ சந்திக்க உள்ளார். இந்நிலையில், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார்.
மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்துள்ளார். “ஜி7 மாநாட்டில் ஜஸ்டின் சாந்தமானவர் போல நடித்துள்ளார். வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா ஏமாற்றுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், நிஜத்தில் அமெரிக்க பொருட்களுக்கு கனடா அதிக வரி விதித்து அமெரிக்க விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கிறது” என டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.