“மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில் மிகு வாவி சூழ்ந்த மாந்தீவில் உள்ளடங்கியிருக்கும் மர்மம்தான் என்னவோ”?
மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் ஒரு பிரிவாகிய தொழு நோயாளர்களுக்கான சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலையே இந்த மாந்தீவில் மறைந்திருக்கும் மர்மமாக இருந்து கொண்டிருக்கின்றது.
தொழு நோய் என்பது தொற்று நோயாகவும், அதை கட்டுப்படுத்த முடியாத நோயாகவும் கடந்த காலங்களில் இருந்து வந்தமையினால் மக்கள் குடியேற்றம் அற்ற இத்தீவினை சுகாதார அமைச்சு தெரிவு செய்து இருநூறுக்கும் மேற்பட்ட தொழு நோயாளர்களுக்கு சிக்சையளிக்கும் வசதி கொண்ட விடுதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது விஞ்ஞான உலகின் நோய்களுக்கான மருந்து வகைகளை புதிது புதிதாக கண்டு பிடிப்பது மட்டுமல்லாது தொழு நோயினை முற்றாக வீட்டில் இருந்தவாறு கட்டுப்படுத்த கூடிய வசதிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தொழு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறே தமக்கான சிகிச்சையினை பெற்றுக் கொண்டு குணமடையலாம் என தற்போதைய விஞ்ஞான உலகம் கூறிவருகின்றது.
இங்கு சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்காக கடந்த பல வருட காலமாக நாளாந்தம் 20க்கு மேற்பட்ட அரச சேவையிலுள்ள சுகாதார பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.
மட்டக்களப்பில் எழில் மிகு தீவாக இருக்கும் இத் தீவினை பாரியதொரு சுற்றுலா மையமாகவோ அல்லது மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் வண்ணம் செயற்படாமல், தொடர்ந்தும் ஊடகங்களுக்கும் அனுமதியளிக்கப்படாத மர்ம தீவாகவே இத்தீவு இருந்து வருகின்றது.
ஒரேயொரு நோயாளிக்காக பல இலட்ச கணக்கான சம்பளத்தினை வீண்விரயம் செய்வதை விடுத்து, இங்கு கடமையாற்றும் 20க்கும் மேற்பட்ட அரச பணியாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்