பிரித்தானியாவின் நார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த இரு சகோதரர்கள் இதுவரை 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த Patrick(23) மற்றும் Miles Connors(18) ஆகிய இரு சகோதரர்களுமே கடந்த 7 மாதங்களாக சுமார் 60 குடியிருப்புகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள்.
கொள்ளையிட்டு முடித்து பொலிஸ் மோப்ப நாய்க்கு கூட வாசனை தெரியாமல் இருக்க சலவைக்கு பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் Bedfordshire பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் இருவரும் சிக்கினர்.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் வீடு புகுந்து கொள்ளை, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
மொத்தம் 61 வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதில் Surrey பகுதியில் மட்டும் 21 கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் ஆபரங்கள், விலை உயர்ந்த கார்கள் என பெரும் பட்டியல் உள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சசெக்ஸ், ஆக்ஸ்போர்டுஷையர், மிடில்செக்ஸ், பக்கிங்ஹாம்ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், கென்ட், எசெக்ஸ், நார்த்மப்டன்ஷையர், லண்டன், ஸ்டேஃபோர்ஷெயர், நாட்டிங்ஹாம்ஷையர், கேம்பிரிட்ஜ்ஷைர், வார்விக்ஷையர் மற்றும் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் Patrick என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் Miles என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மட்டுமின்றி சிறை தண்டனை முடித்து வெளியே வரும் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு மொபைல் அல்லது ஒரு கணிணி மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.