கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாந்தீவு தொழுநோயளர் வைத்தியசாவைக்கு ஊடகவியலாளர் உட்பட யாரும் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய அந்த வைத்தியசாலையில், தற்போது ஒரே ஒரு நோயாளி மாத்திரமே சிகிச்சை பெறுகின்றார். என்ன காரணத்திற்காக யாருடைய உத்தரவின் பேரில் அங்கு யாரும் செல்ல முடியாதவாறு தடையுத்தரவு போடப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் தொழுநோயர் என்பதால் யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
right photo மாந்தீவு, மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக உள்ளது. இந்த தீவிலேதான் தொழுநோயாளர் வைத்தியசாலை உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொழுநோயாளர் வைத்தியசாலையில், 2009ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது.
அப்போது 13 நோயளர்கள் மாத்திரமே அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் தீ அனர்த்தத்தின் பின்னர் உரிய முறையில் வைத்தியசாலை புனரமைக்கப்படவில்லை என்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதியாக செயற்பட்டு வரும் மாந்தீவு வைத்தியசாலையில், தற்போது 20 மருத்துவ சேவையாளர்கள் கடமை புரிகின்றனர் என்று கூறிய அவர், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.
இதேவேளை மாந்தீவு வைத்தியசாலையை மட்டக்களப்பு சிறைச்சாலையாக மாற்ற முற்படுவதாகவும் அப்படியானால் மட்டக்களப்பு சிறைச்சாலை இருந்த இடத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிடம் கையளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைரெட்ணம் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
மாந்தீவு வைத்தியசாலையை மரணதண்டனை, ஆயுள் தன்டனை பெற்ற கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருந்த நிலையில். மீண்டும் அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைவஸ்த்து கடத்தல், பாதாள உலகக்குழுவினர் மற்றும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை பெற்ற கைதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கொழும்பு உட்பட இலங்கையின் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒரு பகுதியினரை அங்கு தடுத்து வைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஆனால் இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இயற்கை அழகு பொருந்திய மாந்தீவு பிரதேசத்தை, மட்டக்களப்புக்கு அழகு சேர்க்கவும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய வகையிலும் புனரமைத்து வழங்குவமாறு மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் அது தொடர்பாக கொழும்பு அரசாங்கம் இதுவரை கவனத்தில் எடுக்கவில்லை என துரைரெட்னம் தொிவித்தாா்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட. மாந்தீவு வைத்தியசாலைக்கு கடந்த வருடம். மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்களும் மட்டக்களப்பு இளைஞா் சம்மேளனமும் இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வைத்தியசாலைகளின் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு உரியது. ஆனால் கிழக்கு மாகாண சபையுடன் எந்தவிதமான கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி தன்னிச்சையாக கொழும்பு அரசாங்கம் மாந்தீவு வைத்தியசாலையை சிறைச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றமை ஏற்புடையதல்ல என்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் கூறுகின்றன.
கொழும்பு நகரை அழுபடுத்தும் வேலைத் திட்டங்களின் கீழ் கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை, மகசீன் சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்படவுள்ளன. அத்துடன் கொழும்பில் குப்பைகள் சேர்க்கப்படும் இடங்களும் வெளிமாட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.