தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த அவர்,
“வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை.
ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.
மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.
இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன். மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது.
மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே நேற்று நிகழ்ந்திருப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.
இந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி. எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.
நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.
இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.