“கேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடைக் கொடுத்த சம்பவமானது வட முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்” என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எளிய (வெளிச்சம்) என்ற அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரட்ணபிரியபந்துவிற்கு வடக்கில் கொடுக்கப்பட்ட மரியாதைக்கும் உணர்வு பூர்வமான செயலுக்கும் தலைவணங்கி விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் தமது பதவிகளைத் துறக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளையே செய்து வருகின்றது எனச் சுட்டிக்காட்டிய சரத் வீரசேகர, இவ்வாறான அரசின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் நாட்டு மக்கள் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார்.