ஆந்திராவில் 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி விஜயலட்சுமியாக பிறந்தார்.
இவரது வசீகரமான தோற்றமே இவருக்கு தொல்லையாக மாறியது. ஏழ்மை எனும் காரணம் கொண்டு இவரை தீண்ட பலரும் முனைந்தனர். திரைக்கு வரும் முன் சிறு வயதிலேயே பல தொல்லைகளுக்கு ஆளானவர் விஜயலட்சுமி எனும் சில்க்.
பலதரப்பட்ட தொல்லைகளின் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர் இவரது குடும்பத்தார். ஆனால், இவரது இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட துன்பத்தால் சென்னைக்கு ஓடிவந்தார்.
ஆரம்பத்தில் சினிமாவில் இரண்டாம் நிலை நடிகையாகவும், ஒப்பனை கலைஞராகவும் தான் தொடங்கினார் சில்க்.
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான வினுசக்ரவர்த்தியின் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1980-களில் இவரது நடனம் இடம்பெறாத படமே இல்லை என்பது போல தான் இருந்தது. ரஜினியில் இருந்து கடைசிக்கட்ட நடிகர் வரை அனைவரின் படங்களிலும் இவர் இடம்பெறும் ஒரு பாடலாவது இருக்கும்.
இவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்ட இவர்கள். விஜயலட்சுமியின் திறமையை குறைத்துவிட்டனர்.
புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம் பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.
1996-ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார் சில்க். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தயாரிப்பாளரக முயற்சித்த போது ஏற்பட்ட கடன் மற்றும் காதல் தோல்வி என்று கூறப்பட்டன.
மேலும், இவருக்கு இருந்த குடிப்பழக்கம், மன இறுக்கம் போன்றவையும் இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இவருக்கு கொடுக்கப்பட்டு வந்து பாலியல் தொல்லைகள் தான் முக்கிய காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரது மரணத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.