21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில், வரும் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை
தயார்படுத்தி வருகிறது ரஷ்யா.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை பயன்படுத்துவதை போட்டியை நடத்தும் நாடுகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன.
கடந்த 2010ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிகாவில் நடந்த உலகக் கிண்ண தொடரின் முடிவுகளை கணிக்க ‘பால்’ எனும் ஆக்டோபஸ் பயன்படுத்தப்பட்டது. அதன் கணிப்புப்படி ஜேர்மனி அணி தொடர்ச்சியாக ஆடிய ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
மேலும், ஸ்பெயின் அணிதான் கிண்ணத்தை வெல்லும் என்று ஆக்டோபஸ் கணித்ததும் பலித்ததால், அந்த ஆண்டு கதாநாயகனாக ஆக்டோபஸ் விளங்கியது.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடரில் ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ எனும் பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகிறது.
இந்த பூனைக்கு அனா கசட்சினா என்பவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் பயிற்சி அளித்து வருகிறார். போட்டியில் மோதும் அணிகளின் கொடிகள், இரண்டு கிண்ணத்தில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.