யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா ஆகிய இடங்களில் நான்கு அதிசிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக இந்தப் பணிகள் நெதர்லாந்து அரசின் 60 மில்லியன் யூரோ நிதி உதவியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பு சத்திரசிகிச்சைப் பிரிவும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிறப்பு தாய் சேய் நலப் பிரிவு மற்றும் சிறப்பு விபத்து சிகிச்சைப் பிரிவும், மாங்குளத்தில் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலையும், வவுனியாவில் இருதய மற்றும் சிறுநீரக சிறப்பு சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தும்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் பணியாற்றியபோது, 2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கான நீண்டகால சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அவர்களது அனுமதியுடன், இலங்கை தேசிய திட்டமிடல் அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஒஸ்ரிய அரசு மற்றும் நெதர்லாந்து அரசு ஆகியன நிதி உதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு அரசுகளினது நிதியைப் பெற்று வாமிட் என்ற நிறுவனம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக, அந்த நிறுவனப் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் இருந்தபோது வடக்குக்கு வருகை தந்து நிலமைகளை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் மன்னார் மாவட்டமும் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. எனினும் 60 மில்லியன் யூரோ நிதிக்குள், மன்னார் மாவட்டத்தில் சிறப்பு சிகிச்சைப் பிரிவை அமைக்க முடியாது. இதனால் மன்னார் மாவட்டம் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, மன்னார் மாவட்டத்துக்கு மேலதிக நிதி பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பருதித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள்ளே தனியான பிரிவாகவே சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
கிளிநொச்சி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் தற்போதுள்ள கட்டிடங்களே அபிவிருத்தி செய்யப்பட்டு தனியான சிறப்பு சிகிச்சைப் பிரிவு செயற்பட ஆரம்பிக்கும்.
மாங்குளத்தில் உள்ள வைத்தியசாலை முற்று முழுதாக ஆதார வைத்தியசாலைக்குரிய வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலைக்குரிய சிறப்புப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும். வடக்கிலுள்ள 42 ஆயிரம் சிறப்புத் தேவையுடையோருக்கு இந்த வைத்தியசாலை உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.