மட்டக்களப்பிற்கு வெளியிடங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகத்துள்ளமையினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் வைத்தியக் கலாநிதி தர்சினி காந்தரூபன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் டெங்கு நோய் தடுப்பு மற்றும் மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள 14 பொதுச் சுகாதாரப் பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் ஏனைய தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தவகையில் உப்போடை, தாமரைக்கேணி, கருவேப்பங்கேணி, கொக்குவில் மற்றும் மாமாங்கம் பகுதிகளில் தற்போது டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் நீர்க் கொள்கலன்கள் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு முகாமைத்தவம், நீர் நிலைகள், கிணறுகள், வீட்டின் மேலுள்ள நீர்த்தாங்கிகள், வடிகான்கள் என்பவற்றிலும் சுகாதார நிலையை உறுதிப்படுத்தல் அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை டெங்கு நோய் பரவும் வகையில் இடங்களை வைத்திருப்போருக்கு எதிராகவும், வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர முதல்வர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.