முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப் கூறியதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யார் எப்படி வேண்டுமென்றாலும் எழுதமுடியும் என்று கூறியுள்ள அவர், ஆனால் இந்த விவகாரம் குறித்து குறித்த சந்திப்பில் பேசப்படவில்லை என்றும் கூறினார்.
ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப்பிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என்று அமெரிக்கத் தூதுவர் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதில் எந்தவித உண்மையும் இல்லை என்று இருதரப்பினர் சார்பாகவும் அறிக்கைகள் மூலமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான நோன்பு திறப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பிய மஹிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகின்ற சர்ச்சைக்குரிய விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.
இதேவேளை ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றும் புரட்சியை எப்போது ஆரம்பிப்பீர்கள் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எப்போது வேண்டுமானாலும் தமது புரட்சி ஏற்படலாம் என்று கூறினார்.