வடக்கு மாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப் பலத்தை தராதுவிடின் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதனை தும்புக்கட்டையாலும் தொட்டுப்பார்க்க முடியாது எனக் கூறியவர்கள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்றிய பிற்பாடு அதிலிருந்து இதுவரையில் சாதித்ததுதான் என்ன?
கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் உரிய முறையில் இவர்கள் பயன்படுத்தவில்லை. 30 மாகாணசபை உறுப்பினர்களும் தலா 65 லட்சம் ரூபா வீதம் 2013 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரையில் தமக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிதியிலிருந்து மக்களுக்கு இதுவரையில் என்ன செய்துள்ளார்கள்? ஆனால் கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் நாம் எமது மக்களின் நலன்களுக்காக பல்வேறு வகைகளில் பயன்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளோம்.
அந்த வகையில்தான் வடக்கு மாகாணசபையை நாம் கைப்பற்றுவோமானால் 3 தொடக்கம் 5 வருடங்களுக்குள் வளங்கொழிக்கின்ற செல்வம் கொழிக்கின்ற பூமியாக நிச்சயம் நாம் மாற்றியமைப்போம்.
அதுமாத்திரமன்று எமது மக்களின் வாழ்வாதாரத்துடன் கூடியதான பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் சிறந்த முறையில் முன்கொண்டு செல்லுவோம் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கின்றது.
ஆனால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி எமக்கு முழுமையான ஆதரவை தருவதனூடாக எமது மக்களின் வாழ்வில் பாரிய மாறுதல்களையும் ஏற்றங்களையும் நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம்.
அதைவிடுத்து மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப்பலத்தை தராதுவிடின் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா. வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.