இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது, ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சம்பந்தன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இரா.சம்பந்தன், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காதிருக்கின்றது.
இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால், இனிமேலும் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது” என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், “இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசியிருந்தேன். இனிமேலும் தாமதிக்காமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரியிருந்தேன்.
எனவே, எந்த வழியிலாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன்.
இதன்போது மறுப்பு ஏதும் கூறாது ஜனாதிபதி அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்” என இரா. சம்பந்தன் பதிலளித்து பேசியிருந்தார்.