இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை வீரர் தனஞ்ஜெய டிசில்வா பந்தை சேதப்படுத்தியதாக அம்பயர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து வீரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டத்தின்போது பந்தை மாற்ற அம்பயர்கள் முடிவு செய்தனர்.
இதனால் ஆட்டத்திற்கு வராமல் இலங்கை வீரர்கள் டிரஸ்ஸிங் அறையிலேயே இருந்தனர். இதனைத்தொடர்ந்து போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் இலங்கை கேப்டன் சண்டிமால் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் போட்டியைத் துவக்கினார்.
இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைபட்டது. மேலும் இலங்கை வீரர்களுக்கு அபராதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசி, ”பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும்,” என இலங்கை வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.