கடந்த அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்பிற்காக சிவில் மக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14ஆம் திகதி அம்பலங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை தடுக்க கூட்டு எதிர்கட்சியில் பசிலுக்கு நெருக்கமான குழு பாரிய முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பகிரங்க மேடை வரை அந்த நிலைமை தொடர்ந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இரகசியமாக பசிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரியவந்துள்ளது.
குறித்த கூட்டத்தில், சிலாபத்தில் மீனவர்கள் கொலை, கட்டுநாயக்க ரொஷான் சானக கொலை ஆகிய கொலைகள் தேசிய பாதுகாப்பு என்ற பெயருக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் என பசில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் ஊடாக தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவை, பசில் பகிரங்கமாக விமர்சித்துள்ளார் என பொதுஜன பெரமுன கட்சியில் கோத்தபாயவுக்கு நெருக்கமான தரப்பு குறிப்பிட்டுள்ளது.