கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி கூலடிவெட்டை விவசாயிகள் வருடா வருடம் மேற்கொள்ளும் நெற்செய்கையின் போது நீர்ப்பாய்ச்சும் அணை சீர் இல்லாமையால் அவதியுறுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 2000 ஏக்கர் விவசாயம் செய்யும் இந்நிலப்பரப்பிற்கு இவ்வணை மூலமே நீர் திசை திருப்பப்பட்டு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வணையை தற்காலிகமாக கட்டுவதற்கு 5 இலட்சம் தேவைப்படும் என்றும் இச்செலவினை தாங்களே பொறுப்பேற்று மேற்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடத்தின் மாரி காலத்திலும் மழை நீர் இவ்வணையை அழிக்க, மீண்டும் 5 இலட்சம் செலவழிக்கப்பட்டு அணை கட்டி முடிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்நிலையே தொடர்வதாகவும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மனுக்கொடுத்தும், விவசாயிகளின் கனவு ‘நீர் மேல் எழுத்துப்போல’ ஆகிவிட்டது எனவும் அங்கலாய்க்கின்றனர்.
ஆயிலியடி கூலடிவெட்டை விவசாயிகள் இதுபற்றி தொடர்ந்தும் விசனம் தெரிவிப்பதாகவும் இவ் விடயம் தொடர்பில் உரிய உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.