நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வருவதை அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.
இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்