யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அப் பகுதி எங்கும் விஷேட அதிரடிப்படையினரும் கலகமடுக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மல்லாகம் தேவாலயத்திற்கு அண்மையில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலுமொருவர் காயமடைந்திருந்தார்.
மேற்படி சம்பவத்தில், தாம் விசாரணை ஒன்றிற்காக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது தம்மை குறித்த பகுதியில் வைத்து குழுவொன்று தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்தே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும் வேறு ஒரு குழு மோதலில் ஈடுபட்ட போதும் அவர்களை எதுவும் செய்யாமல் இவ் இளைஞனை பொலிஸார் சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இச் சம்பவத்தை சோடித்துள்ளதாகவும், துப்பாக்கி சுட்டினை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸார் சம்பவ இடத்தை விடுத்து வேறொரு இடத்தை அடையாளப்படுத்தியிருந்தாகவும் துப்பாக்கி ரவைகளை பொறுக்கி செல்ல முற்பட்டதாகவும் பொது மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மேலும் இதற்கு நீதி கிடைக்கு வரை தாம் அவ்விடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனத் தெரிவித்து வீதியினை மறித்து இருந்ததுடன் வீதியெங்கும் வாகனங்கள் செல்ல முடியாது கற்களை குவித்தும் வைத்திருந்தனர். இதனால் அப் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் கலகமடக்கும் பொலிஸாரும் அப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவ் வீதியுடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்திருந்ததுடன் பதற்றமான சூழலும் நிலவியிருந்தது. இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதியின் நியாயாதிக்க நீதிமன்றமான மல்லாகம் நீதிமன்றின் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.
சம்பவம் தொடர்பாக பொது மக்கள் , சம்பவத்தின் போது நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் மற்றும் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் சம்பவத்தையடுத்து பொது மக்கள் தடயங்களை அழிவுக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்ட விதம் தொடர்பாக கண்டித்தும் எதிர்காலங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் மக்களை வீதி வழி போராட்டத்தை கைவிடுமாறு நீதிவான் கோரியதையடுத்து மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டு வீதியோரங்களில் நின்றிருந்தனர். அத்துடன் நீதிவான் சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்ததுடன் இச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் மக்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் தொடர்ந்தும் அப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டதுடன் அப் பகுதிக்கான பாதுகாப்பு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.