இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர்கள் டிரெஸ்சிங் ரூமில் இருந்து வெளியே வரவில்லை. நடுவர்கள் அலீம் தரும் இயன் கோல்டும் களத்தில் காத்திருந்தனர். வீரர்கள் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரித்ததில் நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்ததுதான், இலங்கை வீரர்களின் கோபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. வெறும் 44.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட பந்தை ஏன் மாற்ற வேண்டும் என்று இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்தனர். அது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்தனர்.
அப்போது இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், தனது பாக்கெட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்து வாயில் போட்டுவிட்டு, பிறகு அதை பந்தின் மீது தேய்ப்பதை நடுவர்கள் பார்த்தனர். இதன் மூலம் அவர் பந்தை சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்தே பந்தை மாற்ற நடுவர்கள் முடிவு செய்தது தெரிய வந்தது.
இதற்கிடையே இலங்கை கேப்டன் சண்டிமால் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது. நடத்தை விதிமுறையை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக அவர் மீது புகார் கூறியுள்ளது. போட்டியின் முடிவில் சண்டிமாலிடம் விசாரணை நடத்தப்படும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அபராதமோ ஓரிரு போட்டிகளில் விளையாட தடையோ விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.